பூங்கா வனம்...!
ஒரு ஞாயிறின்
உச்சிப் பொழுதில்
பால்ய நினைவுகளை
புதுப்பித்துக் கொள்ள
கவிதை போதையை
நிரப்பிக் கொண்டு அந்த
பூங்காவினுள் நுழைந்தேன்.
சற்று கடந்தபோது
சென்ற வருடம் என்னிடம்
பலூன் விற்ற அந்த
அனாதைச் சிறுமிதான்
பூங்காவில் யாரிடமோ
தனைக் கொடுத்ததால்
பாலருந்தும் தன்மகவோடு
முந்தானையை நீட்டி
யாசித்துக் கொண்டிருந்தாள்...
உச்சி வெய்யிலின் முத்தத்தால்
முகத்தில் பூத்திருந்த
உப்(பூ)க்களைச் சொட்டும்
குழாயில் கழுவ நினைத்தபோது
கண்முன் வந்துபோனது…
உக்கிரம் தணிக்க
நிறைந்த கேணியில்
நீந்திவிளையாடிய பொழுதுகள்...
சுற்றியக் களைப்பில்
சூடுபிடித்து வலிதாளாமல்
சிறுநீர் கழிக்கப் பொத்தானை
அவிழ்க்கையில்
இளஞ்சூட்டு முத்தத்தால்
இளசுகள் ரெண்டு புதுக்கவிதை
எழுதத் துவங்கியிருந்தனர்
மண்டிய புதருக்குள்...
இறுதியாக ஒரு
இருக்கையைப் பிடித்தமர்ந்து
பறவைகளின்றி முகம்வெளிரிய
வானத்தைப் பார்த்து
பேனாவைத் திறந்தேன்
எழுத முடியாமல் நிறைத்து
நின்றது இலையுதிர்த்த
பிண்டிமர வெய்யில்...!
- இல. கருப்பண்ணன், சேலம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.