தமிழைப் புறக்கணித்தோமா?
பள்ளி சென்ற மகன்
எத்தாளை நோக்கினும்
A வை அடையாளம் கண்டுரைத்தான்
A for Apple...!
அலைபேசியில் எண்களைக்
கண்டு இயம்பினான்
One ! Two...!
ஆடை, ஆகாயம், பொம்மை, புத்தகம் என
பொருட்களைப் பார்த்து
பறைசாற்றினான்
Red, Blue,Yellow…
தாயை விடத் தந்தை Tall
சாலையில் வண்டியோட்ட தேவை License
என அனைத்திலும்
நீக்கமற நிறைந்துள்ளது ஆங்கிலம்
தாய்மொழியான தமிழில்
பாட்டி வடை சுட்ட கதை
மட்டுமே மிச்சம்…!
நிலா நிலா ஓடி வா எச்சம்…
அடுத்த தலைமுறையினரால்
அறியப்படாத அகரம்
அந்தரத்தில் ஊசலாட
உள்ளத்தில் ஓர் உறுத்தல்
தமிழைப் புறக்கணித்தோமா?
தமிழன் என்ற
அடையாளத்தைப் புறக்கணித்தோமா?
நூற்றாண்டுகள் கடப்பினும்
உலக அரங்கில்
தழைக்கும் நிலைக்கும் தமிழ்!
ஆனால் தமிழன்
நிராகரிக்கப்படுவானா?
- முனைவர் த. ராதிகா லட்சுமி, பொள்ளாச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.