மகளிர் தினமாம்...!

பெண்ணாய் பிறந்தாய்!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும்
இலக்கணம் பெற்றாய்!
உயிரினும் சிறந்தன்று நாணம்!
நாணினும் சிறந்தன்று கற்பு!
என்ற காதல் பொருள் பெற்றாய்!
காமம் தலைத்திடினும் வெளிப்படுத்தா…
வேள்வியாய் விளங்கினாய்!
தலைவன் பிரிந்த துயரினும்…
பிறன்கண் நோக்காப் பெருமை பெற்றாய்!
எக்காலமும் உயர்ந்து
உன்னதமாய் போற்றப் பெற்றாய்!
இத்துணை விதிகளையும்
பெற்றவள் தமிழச்சி!
இவைகளை மறுத்தின்று!
இழிந்தவளாய்!
பித்தர்கள் பிடியிலும்
மூடர்கள் மூளையிலும்
முள்மேல் படுக்கையாய்!
சாதியின் உழையில்
சவுக்கடி மகளாய்!
சபிக்கப்படுகிறாய்!
மதம்கொண்ட ‘மாக்களிடம்’
மதியற்ற மகவாய்
மாறடித்துக் கொண்டிருக்கின்றாய்!
ஊழ்விணை உழையர்களிடம்
ஒப்பாரிப் பாடுகிறாய்!...
சமுதாய வீதியில் சந்தனமலர் போல்
வாசனை வீசிச் செல்ல வேண்டியவள் நீ!.
சவங்களாய் ஊர்வலம் செல்கிறாய்!
பல்துறைப் போற்றும் பாவையாய் நீ!
இன்றென்னவோ?!
பாவங்களைச் சுமக்கும்
பொதிமூட்டைப் போலாகினாய்!
வீடு பேறு எனும் இல்லறத்தை
விட்டொழித்து
வீதிகளில் விலை மாதராய்
விற்கப்படுகிறாய்!
வெற்றிலைப் போல் சிவந்த உன் உள்ளம்!
இன்று வெற்றிடமாய்...
கொழுந்துவிட்டெறியும் நெருப்பின்
சிவப்பில் வாழ்கிறாய்!
இனியொரு யுத்தம் செய்!
இந்நாளிலிருந்து... ... ...!
- முனைவர் அ. இளவரசி முருகவேல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.