மகிழ்ச்சி தரும் செலவு
திருமணத்தைக் குலம்தழைக்க வேண்டு மென்று
திருவதிகம் செலவுசெய்து நடத்து கின்றோம்
அருமையாக இல்லறந்தான் அமைந்த போதும்
அருங்குழந்தை இல்லையென்றால் துயரே மிஞ்சும் !
வருவாயைப் பின்னாளில் வழங்கு மென்றே
வளர்கல்வி பெறப்பணத்தைக் கொட்டு கின்றோம்
தருங்கல்விக் கேற்றபணி கிடைக்கா விட்டால்
தகுதியுடை நெஞ்சத்தில் துயரே மிஞ்சும் !
தங்கவொரு சொந்தமாக வீடு தன்னைத்
தகுதிக்கு மீறிகடன் வாங்கிக் கட்டி
மங்கலமாய் விழாநடத்தி முடியு முன்பே
மனம்நோகக் கடன்கொடுத்தோன் வந்து நிற்பான் !
அங்கங்கள் வியர்வைசிந்தி உழைத்து பெற்ற
அருஞ்செல்வம் வறியவர்க்குக் கொடுக்கும் போது
பொங்குமின்பம் என்றாலும் கையை ஏந்தும்
பொலிவிழந்த முகம்காண நெஞ்சம் விம்மும் !
எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றிச் சுற்றம்
எல்லாமும் ஒன்றிணைந்து செலவு செய்து
சிந்தைக்கு விருந்தென்றே செல்லு கின்ற
சிறப்பெல்லாம் சுற்றுலாவின் பயணத் திற்கே !
சந்திக்கும் புதுநண்பர் நாக ரீகம்
சரித்திரத்து இடங்களொடு இயற்கைக் காட்சி
பந்திவைத்து மகிழ்ச்சியினை அள்ளிக் கொட்டப்
பட்டறிவால் பெறும்பயனிற் கீடும் உண்டோ !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.