பெண்ணின் பெருமை!
கருவறையைத் தாங்கிநிற்கும் தெய்வம் ஈன்று
காத்தருளி வளர்ப்பதனால் உய்வம் சொல்லும்
திருப்புகழால் வாழ்வுபெறும் பிறவி என்றும்
துதிசெய்ய மறக்கவொண்ணா இறைவி தேடும்
உருவினிலே பொருள்கொள்ள வேண்டி நல்ல
உத்தமரை உயர்வாக்கும் வழியைக் காட்டும்
அருந்தவமே மகளிர்தம் தேடல் ஓசை
அகிலத்தின் அவதாரங் காட்டும் ஆசை.
பிறந்ததொரு நாள்முதலாய் அன்பு, செல்லப்
பெண்பிள்ளை யென்னுமொரு பெயர்தான் வெள்ளை
திறந்தமனம் அருகாமை கொஞ்சல் கொஞ்சம்
சிணுங்குவதில் கண்ணம்மா என்ற ழைக்கப்
பறந்துவிடும் உள்மனதுக் காயம் பாசப்
பார்வைகளால் சிறகடிக்கும் பறவை போல
சிறந்துநிற்க வாழ்க்கையிலே மிஞ்சும் நெஞ்சம்
தேடுவதோ அன்பென்ற ஒன்றே நன்றே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.