குறுங்கவிதைகள்
இளவேனிற்காலம்
மெதுவாக உலர்கின்றன
கார்க்கால ஈரக்காதல் நினைவுகள்.
*****
உறங்கும் நிழலுக்கு
பாய் விரிக்கின்றன விழும் இலைகள்-
இலையுதிர்க்காலம்.
*****
ஆடிக்காற்று -
அடித்துச் செல்கின்றன
அஸ்திவாரமற்ற நினைவுகள்.
*****
மொழி பெயர்க்கப்படுகிறது
முதலிரவு அறைகளில்
ஏதேன் தோட்டத்து நிர்வாண உரையாடல்.
*****
சிதறிய சித்திரங்கள்.
சீன நெடுஞ்சுவரை
தழுவிட இயலா ஏக்கம்.
*****
நள்ளிரவிலும் நடை பெறுகிறது
சூரிய வணக்கம் யோகா -
கதிரவன் மறையா நாடுகள்.
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.