தப்பி ஓடுகின்றன கார்மேகங்கள்
நெறி தவறிய வருணன் -
அமேசான் மழைக் காட்டில்
பரவிய தீ.
*****
தென்றலாக உருவாகிறது
சிலுவை கோபுரத்தை தாக்கிய
சூறாவளி.
*****
பெருமூச்சுடன் கடக்கின்றன
ஐஃபெல் கோபுரத்தை -
சிமெண்ட் பொதியேற்றிய ட்ரக்குகள்.
*****
தேசியக் கீதம் இசைத்ததும்
எழுந்து நிற்கிறது பாரிச வாயு
பாதித்தவனின் மனத்திடம்.
*****
மேலும் வளைக்க இயலவில்லை
தப்பி ஓடுகின்றன கார்மேகங்கள்
வானவில்.
*****
பூத உடலை சுற்றி
கூடியிருந்தனர் மலர் வலையங்களுடன்
மனிதர்கள்.
*****
எகிப்தின் பிரமிடுகளை
ஏளனம் செய்யும் ஆன்மாக்கள் -
பயனில்லா பிரேதங்களின் காத்திருப்பு.
*****
பள்ளி வாசலில் மூன்றாம் பிறை
யாசகனின் ஓட்டை சட்டைப் பை
விளிம்பில் ஒற்றை ரூபாய் நாணயம்.
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.