தேர்தல் வருது... தேர்தல் வருது...

தேர்தல் வருது... தேர்தல் வருது...
சேதி தெரியுமா..?
தெய்வானை சேதி தெரியுமா...?
தேடி வருவாங்க - தெய்வானை
ஓடி வருவாங்க...
கூடி வருவாங்க - தெய்வானை
நாடி வருவாங்க...
அம்மா தாயின்னு அப்படியேக்
காலிலே விழுவாங்க...
நம்ம கூட சேர்ந்து களையும்
எடுப்பாங்க - ஏமாறாதே...
தெய்வானை ஏமாறாதே..!
குடிசைக்குள்ளாற
வந்து உட்கார்ந்து
கஞ்சி குடிப்பாங்க...
நம்ம கூட சேர்ந்து கல்லும்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
பக்கத்துல உக்கார்ந்து
பாசத்தோடு பேசுவாங்க...
நம்ம கூட பல்லாங்குழியும்
ஆடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
சாலை... தண்ணி... அனைத்தும்
தேடி வரும்பாங்க...
உன்னை தெய்வம்ன்னு
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
இலவசம் தருவாங்க...
கைச் செலவுக்கு
காசும் கூடக் கொடுப்பாங்க...
கௌரவம் பாக்காம
காலில் விழுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
எம்.எல்.ஏ.வும் எம்.பியும்
சேர்ந்து வருவாங்க...
நிறைய சேதிகளைச்
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
கோரிக்கையைக் எழுதிக்
கொடுன்னு கேட்பாங்க...
கொண்டு போய்க்
குப்பைத் தொட்டியில்
போட்டிடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
பல்லை இளிப்பாங்க
பசங்க கேட்பதை
வாங்கிக் கொடுப்பாங்க...
பாலுக்கு அழும்
குழந்தையைத் தோளில்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
பணத்துக்கும்
இலவசத்துக்கும்
மயங்கிக் கிடந்தது
போதும் தெய்வானை...
நாம் மதி கெட்டதும்
போதும் தெய்வானை...
அடங்கிக் கிடந்ததும்
போதும் தெய்வானை...
அடிமையாய்ப் போனதும்
போதும் தெய்வானை...
பொய்யர்களை விரட்ட
பொதுவாய்ச் சிந்திப்போம்
வாடி தெய்வானை...
நல்லவராய்த் தெரிந்தால்
வாக்களிப்போம்...
இல்லையெனில்
நாம் நோட்டாவுக்கே...
வாக்களிப்போம்!
- 'பரிவை' சே. குமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.