தவளைச் சத்தம்
அடைக்கலம் தேடி ஓடின
பருந்தின் நிழலைப் புறக்கணித்த
கோழிக் குஞ்சுகள்.
*****
திறந்த அறைக்கதவு
இருளை பூசிக்கொண்டு அஞ்சி
பின்வாங்கியது ஒளிவட்டம்.
*****
இடைவெளி விட்டு தாக்கும் காற்று
அசைந்துக் கொடுக்க மறுக்கின்றன
மேற்குத்தொடர்ச்சி மலைகள்.
*****
ஓடி விளையாடு எறும்பினமே!
இன்னும் காலமுண்டு
பைசா கோபுரம் முழுதும் சாய்ந்திட.
*****
இறந்தக் கடலின் மேல்
உதிர்கின்றன
வாழும் பறவைகளின் சிறகுகள்.
*****
ஏரி கற்கள் விழுந்து
இடையூறு செய்கின்றன
எண்ணுகையில் விண்மீன்கள்.
*****
ஏரிக்கரையை கடக்கையில் கேட்கிறது
மின்பிம்பங்களை விழுங்கிய
தவளைச் சத்தம்.
*****
சிறகின் ஒவ்வொரு அசைவிலும்
ஒரு ஹைக்கூவை உதிர்த்து விட்டு
பறக்கிறது பட்டாம்பூச்சி.
*****
காயமின்றி வெளியேறுகிறது
ஊசி இலைக்காடுகளை தழுவிய
தென்றல்.
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.