மே தினமே... வையகத்தின் சீதனமே...!
உழைப்போர்க் கான மேதினத்தை
ஒருவழி யாகப் பன்னாட்டு
குழுமங்க ளிங்கு வளைத்தனவே
கொண்டாட் டங்கள் பொய்யாகப்
பழுதா யாக்கி உழைப்பினையே
பலவாய்ச் சுரண்டிப் பிழைத்தனரே
முழுதா யுழைப்பின் முழுப்பயனை
முன்னே சேர்க்க மறுத்தனரே
எட்டு மணிநே ரவுழைப்பும்
எட்டு மணிநே ரவோய்விங்கும்
எட்டாக் கனியாய்ப் போனதுவே
எப்போ துமிங்கு வுழைத்தால்தான்
எட்டுச் சாணு டம்பிலொட்டி
இருக்கும் ஒருசாண் வயிற்றுக்கைக்
கிட்டும் உணவும் போதாமல்
கேள்வி கேட்கத் தெம்பிலையே
போராட் டங்கள் முன்னெடுத்துப்
பொங்கும் உணர்வும் மங்கியதே
சீராட் டுகின்ற பணங்காசுச்
செல்லுந் திசையை நாடிடுதே
ஊரோ யிங்கு வேறுபட்டே
ஒற்று மையின்றிப் போனதுவே
வேரா யிருக்கும் உழைப்பதனை
வீணா யாக்கும் நிலையாச்சே
கூலி கூடக் கொடுக்காமல்
கொள்கை வீரம் பேசிவிட்டு
வேலி யில்லாப் பயிராக
மேய்கின் றாரே ஒருகூட்டம்
ஊழி வரினும் உழைப்பொன்றே
உலகின் தெய்வம் எனுஞ்சொல்லை
வாழி யென்னும் மேதினமே
வைய கத்தின் சீதனமே!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.