தேய்ந்து போனது...!
பால்வெளி நிலவு
பகலொளி தந்தாற் போல்
பவுர்ணமி வெளிச்சம்
ராத்தங்காமல்
ஊரூராய்ச் சுற்றித்திரியும்
தேசாந்திரியின் வாய்
முணுமுணுக்கும் பாடல்
முகேஷையும் ஒரு
பழைய ஹிந்திப்படக்
காதலனையும் நினைவுறுத்தும்
எதிர்ப்படும் மரங்களின் மேல்
கவிந்திருக்கும்
இருளையும் ஒளியையும்
குசலம் விசாரித்தபடிச்
சென்றவன் சிந்தையில்
சின்னதோர் ஐயம்...
மீண்டும்
திரும்பி வரும்போது
இதந்தரும் மரங்களுடன்
இந்தப் பாதைதான்
இருக்குமோ என்னவோ
எண்ணிப் பார்த்தவன்
மீண்டும் மீண்டும்
மரங்களையும் பாதையையும்
உற்றுப் பார்ப்பவன் வாயில்
இப்போது
அந்தப் பாடல்
தேய்ந்து போயிருந்தது
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.