விழித்துக் கொள்
அடிமைப்படுத்த நினைத்தால் - அவர்கள்
அடங்கத்தான் மறுப்பார்கள்
அத்துமீறத்தான் செய்வார்கள்
ஆண்ட பரம்பரை பெருமை பேசி
ஆன்ட்ராய்டு செல்போன் காலத்திலும்
அறிவிழந்து மிருகமாய்
அடக்கி ஆள நினைக்காதே
இதுவரை நாம்
இழந்தது எல்லாம்
பாழாய்ப் போன சாதி - மதத்தால் என்பதை
ஒரு போதும் மறக்காதே
புலிக்கதை
புரட்சிக் கதை பேசுவதற்கு முன்
நம் மனதின் ஓரத்தில் சாக்கடையாய்
ஓடிக்கொண்டிருக்கும்
சுய சாதிப் பெருமையை
தூக்கித் தூற எறிவோம்
விஷ விதையாய் நம்முள்
விதைக்க நினைக்கும்
மத துவேஷங்கள் எல்லாம் ஒரு போதும்
ஆன்மிகமாகாது
தொழில் வைத்துச் சாதி பிரித்தவனின்
தந்திரத்தைப் புரிந்து
மனிதன் மனிதனாக
வாழ்ந்தால் மட்டும் தான்
அரசும் நீதியோடு அரசாளும்
நாமெல்லாம் மதம் பிடித்துத் திரியும் வரை
அநீதிகள் பெருகி
அராஜகங்களே அரங்கேறும்...
எனவே விழித்துக் கொள்ளுங்கள்...
- இரட்சகன், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.