இளம் ஆண்களின் கனவுகளில்...
கண்ணடிக்கிறாள்
கண்ணாடி மனசுக்குள்
ஏதேதோ செய்கிறது.
கெஞ்சிக் கேட்கிறேன்
என்னை விட்டுவிடும்படி - ஆனால்
கொஞ்சிப் பேசுகிறாள்
இறுதியாய்
ஆள் காட்டி விரலால் தன்
சிவந்த உதடு தொட்டு
குவித்து, குவித்த உதட்டோடு
அருகே வரும் போது
பயத்தில் வியர்த்துக் கொட்டி
கடைசியாய்
அவள் கால்பிடித்துக் கதறும் போது
சனியனே நைட்டுல
கண்ட இங்கிலீஸ் படம் பார்த்திட்டு
தூக்கத்துல புலம்பாதே என்று
காலை அர்ச்சனையைக் காரித்துப்புதலை
வழக்கமாய்க் கொடுத்து விட்டு
தெருவாசலை கூட்டச் சென்றாள் அம்மா.
எத்தனை திட்டு வாங்கினாலும்
அழகான இராட்சசிகள்
தினம் தினம் விடியும் இரவுகளை
பிடித்து, பயமுறுத்தி பூர்த்தி செய்ய
என்னைப் போன்ற
இளம் ஆண்களின் கனவுகளில்
அன்றாடம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!!
- இரட்சகன், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.