பார்வையற்றவனின் கனவுகள்
பெருவலி உணர்ந்தால்
அது நரகம்
உள்மனம் குளிர்ந்தால் அதுவே சொர்க்கம்
எது மனிதன்? எது மிருகம்?
குழப்பங்கள் ஒரு பக்கம்
எது உண்மை? எது பொய்?
நிலைத்தடுமாற்றம் மறுபக்கம்
தொட்டுப் பார்த்துணர்ந்த தருணங்கள்
தொடமுடியாத உருவங்களில் உலா வர
முத்த சத்தமும் முனகல் மொத்தமுமே
காதலுக்கான அடையாளங்களாய்
வருடிச் சென்ற தென்றலையும்
வாரிப் போடும் புயலையும்
வேகங்களில் புரிந்தபடியாய்
வந்து போகும் வண்ணமற்றக் கனவுகள்
தட்டி எழுப்பும் நேரமும் தெரியாதவனாய்
படுத்துக் கொண்டிருக்கிறேன்
என் கனவுகளும்
என்னைப் போலத்தான்
பார்வையற்றவைகளே … … …
- வாசகன் வெங்கடேசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.