அதிகாரப் பிச்சை
வீட்டின் முன் கையேந்தும் பிச்சைக்காரன்
விடுக்கின்ற குரலினிலே பசியின் ஏக்கம்
காட்சியாகத் தெரிகின்ற முகத்தின் கண்ணில்
கவலையொடு இயலாமை தோய்ந்த பார்வை!
சாட்சியாக நிற்கின்ற உடல் வளைந்து
சாம்புகின்ற இரக்கத்தில் பணிவுத் தோற்றம்
மீட்சியென நாம் கரத்தில் கொடுக்கும் காசால்
மிளிர்ந்து மனம் நிறைந்துவிடும் அவரின் வாழ்த்தால்!
அரசாங்க அலுவலக அறையின் உள்ளே
அமர்ந்தபடி இருக்கின்ற பிச்சைக்காரர்
வரம் கொடுக்கும் கடவுளென்னும் தோற்றத்தோடு
வருவோர்க்குக் காட்சியினைத் தருகின்றார்கள்
குரலினிலோ அதிகாரம் மிரட்டும் கண்கள்
குறிப்பிட்ட தொகைதன்னை உறையில் போட்டுக்
கரங்களிலே கொடுத்தால்தான் நகரும் கோப்பு
கட்டாயப் பிச்சையினால் கொதிக்கும் நெஞ்சு!
உடற்குறைவால் உழைப்பதற்கே இயலாராக
உள்ளவர்க்குக் கொடுப்பதுவோ மனிதநேயம்!
உடல்நலமாய் உள்ள போதும் உழைப்பதற்கே
ஊதியத்தைப் பெற்ற போதும் கையூட்டாகத்
தடம் மாறிக் கேட்கின்ற கயவர் கட்குத்
தண்டனையைக் கொடுப்பதுவே கடமையாகும்
அடற்காட்டுப் பாம்புகளாய் வீற்றிருக்கும்
அதிகாரப் பிச்சையரை ஒழிப்போம் வாரீர்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.