நிறங்களில் இத்தனை அர்த்தங்களா...?

நிறங்களில்
இத்தனை அர்த்தங்களா...?
மஞ்சள் என்றதும்
மங்கலம் என்கிறார்
நான்கு மூலையில்
மஞ்சள் தடவிய
கல்யாண பத்திரிகை
நவில்கிறது உண்மை
ஒன்றுமில்லாதவன்
ஓடிப் போய்
கை விரித்து விட்டால்
மஞ்சக் கடிதாசி கொடுத்தவனாம்
ஒன்றுமே இல்லாமல்
உள்ளொன்று வைத்து
அந்தரங்கங்களை...
கிசுகிசுவாய் உரக்கச் சொல்ல
மஞ்சள் பத்திரிக்கையாம்
என்ன சொல்ல
சாலையோரக் குறியீடுகளில்
மஞ்சள் என்றாலே
நின்று நிதானித்து கவனித்தலே.
நிறங்களில்
இத்தனை அர்த்தங்களா...?
பச்சை என்றாலே
பசுமை தான்
கூச்சமின்றி அந்தரங்கத்தைக்
கொள்ளை கொள்ளையாகப் பேச
பச்சையாய்ப் பேச்சென்பார்.
எந்தக் காரியமாயினும்
பச்சைக் கொடி காட்டத்
தடையில்லை
என்று தானே நகரும்
பச்சை நிறக் குறியீடு
புறப்படச் சொல்லாமற் சொல்லும்.
பச்சை வெற்றியின் குறியீடாகும்
நிறங்களில்
இத்தனை அர்த்தங்களா...?
அடுத்த நிற அனுமானம்
சிவப்பெனில்
நிச்சயம் நீங்கள்
நிறக் கணிப்பில வெல்கிறீர்கள்
ஆபத்துக்கான, எச்சரிக்கைக்கான
அறிகுறி நிறம் சிவப்பு
சிவப்பு விளக்கு பொருத்திக்கொண்டே
அமரர் ஊர்தியானாலும்
அவசர ஊர்தியானாலும், ஏன்
அமைச்சர் ஊர்தியானாலும்
விரைந்து செல்கிறதே...
விரைவின் நிறம் மட்டுமல்ல
மரணத்தின் நிறம் சிவப்பென்க
அவ்வப்போது
வறுமையின் நிறமாகவும் கொள்க
அவரவர் தேவைக்கேற்ப.
புரட்சியில் எல்லாம்
அவசரமாய்த் தலைகாட்டும் நிறம்
அவசியமானதாகவும்...
எதனையும், யாரையும்
நிற்கச் சொல்லும் நிறம்
எல்லோர் உடம்பிலும்
சாதிமத பேதமின்றி
சமதர்மமாய் ஓடும் நிறம்
பாலியற் தொழிலாளிக்காய்
பரிதாபமாய் முன்னிற்கும் நிறம்
ஆமாம்... நிறங்களில்
இத்தனை அர்த்தங்களா...?
அடுத்தது வெள்ளைதான் என
ஆர்வமிகுதியில் குரல் கொடுப்பவரா...?
வெள்ளை மனதுக்காரர் நீங்கள்
ஒன்றும் அறியாதவர்
வஞ்சமோ நியாயமோ
கொஞ்சமும் புரியாதவர்
போரைத் தவிர்க்கும்
அமைதி நிறமுமாகும்
வெள்ளை எப்போதும்
வெள்ளையாய் இருப்பதில்லை
அதன்மீது ஏற்றும் நிறங்களை
ஏற்று நிறம் மாறும்.
இப்படியேச் சொல்லிக் கொண்டேப்
போகலாம் நிறங்கள் பற்றி...
எல்லா நிறமும் நிறமல்ல
ஏழுவண்ண வானவில் நிறங்களை
ஒரு அட்டையில் வரைந்து
வேகமாகச் சுற்றுங்கள்
வெள்ளையைக் காணலாம்
வெள்ளைக்குள் அடங்கியவை
பிற நிறங்களா
பிற நிறங்களில் ஒரு கூறாய்
வெள்ளை நிறமா...
இப்படித்தான்
மனிதர்கள் பல நிறங்களில்
தன் குணங்களை எல்லாம்
நிறங்கள் மீது ஏற்றிவிட்டான்
நிறங்களுக்கே ஒரு
நிறத்தைப் பூசிவிட்டான்
நிறங்களுக்குள்
இத்தனை மனிதர்கள்.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.