வாழ்வின் தேடல்
வாழ்க்கையெனும் நெடுங்கதையின் பயணம் தேடல்
வரவிற்கும் செலவிற்கு மான ஊடல்
ஊழ்வினையின் தொடர்கதையாய்ச் சேரும் கூடல்
உற்றதெது மற்றதெதென் றறியாப் பாடல்
ஆழ்மனதின் அடியுறங்கும் கனவின் ஆடல்
ஆசைகளின் ஊர்வலத்தில் விரைவாய் ஓடல்
பாழ்கிணறாய்ப் பயனிலாது வாழ்வை நாடல்
பண்பாமோ அறிவாமோ உணர்வாய் தேடி!
ஆசைமன வலையினிலே அகப்பட் டேநாம்
ஆடுகின்ற ஆட்டங்கள் கொஞ்சம் தானோ
வேசமிட்ட மனிதரென உள்ளே ஒன்றும்
வெளியினிலே வேறொன்றாய்த் திரிவர் காலப்
பூசையிலே எல்லோர்க்கும் அவர வர்தம்
பூர்வவினை நிகழ்கருமம் இரண்டும் சேர்ந்தே
ஊசலாடும் பயனெனவே அதற்கேற் பத்தான்
உயிர்ப்பிறவிக் கூதியமாய்க் கிட்டு மன்றோ!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.