வாழ்ந்து பார்ப்போமே...!
ப்ரியங்களைக் கொட்டிய
புன்னகைப் பூக்களைத் தூவி
ஓரவிழிப் பார்வையில்
ஓராயிரம் கவிதை புனைகிறாய்
உன் வருகையால்
பருவநிலை மாற்றம் பெற்று
வசந்தகாலமாக ஆக்கும்
வல்லமை பெறுகிறது
உன் மூச்சுக் காற்று
காற்றின் மொழியையே
பெயர்த்துவிட்டு
இளந்தென்றலாய் வாசிக்கிறது
உன் விழித்தீண்டலே
என் உயிர்மீன்களை
உயிர்ப்பிக்கவும் வளர்க்கவும்
உறுதிபடச் செய்கிறது
தொலைதூரத்தில் இருந்தாலும்
என்னுள் நீ இட்ட
காதல் முட்டைகளை உன்
நினைவுகளாலேயே அடைகாக்கிறாய்
யாரும் எதுவும் சொல்லாமலேயே
நம் காதல் சிறகடிக்கிறது
இதில் எதற்கு ஆணவமும்
அதிகாரப் பரவலும்
அனைத்தையும் நொறுக்கி
அத்தனைக்கும் ஆசைப்பட்டுத் தான்
வளர்காதல் நெஞ்சங்கள்
வையகத்தில் வாழ்கின்றன
அதற்கென்ன...
மாறாத சாட்சியமாய்
ஒரு முறை வருங்காதலை
உள்ளன்பில் வாழ்ந்து பார்ப்போமே
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.