தேடிக் கண்டடைந்த கணம்

கல்லூரி நாட்களில்
உன் வருகை பார்த்து
பரிதியில் காய்ந்த
அதே ஞாபகம் இன்றும்...
நீயென்று நம்பி
வெயிலில் காய்ந்த
பொழுதில்...
உனைக் காதலித்ததால்
சூரியனும்
என்பால் இரக்கமுற்று
சற்று குறைத்தே
காட்டுகிறான்...
அவன் காட்டத்தை...
நீ கடந்த வலிகளையும்
உனைத் தாண்டிய
வலிகளையும் மீறி
உன் விழிகளில்
தெரிந்தது...
எனக்கான காதல்...
உன் கைபற்றுதலில்
உறைந்த மனம்
தன்னை அறிமுகம்
செய்து கொண்டது
பழைய ஞாபகங்களாகவே...
சத்தியமாய்ச் சொல்கிறேன்...
இத்தனை வருடங்களை
இழந்ததாக நீ
சொல்லும் பொழுதுதான்
உணர்ந்து கொண்டேன்...
என் காதலின் வெற்றியை...
நீயாகவே இருக்கிறாய்...
உனைக் கண்ட நானும்
அப்படியேதான் இருக்கிறேன்...
ஏனோ காதல் மட்டும்
முன்னை விட இன்னும்
அதீதமாகியது...
'கையைக் கொடு'
என்றதும் வேர்த்த
கரங்களில் கோர்த்துக்
கொண்ட விரல்களைத்
தடவிப் பார்க்கையில்
என்னுள் ஊறியது...
உன்னுள் நானிருந்த
உணர்வுகள் எல்லாம்...
பட்டாம் பூச்சிகளின் துடிப்பை
உணர்த்தியது
நீதான்...
உனைக் கண்டதும்
எனக்கும் சிறகு
முளைத்ததை
உணர்ந்தேனே...
என் பார்வைக்குள்
விழுந்த பிம்பம்
நீயில்லாமல் போனால்
ஏமாற்றத்தோடு
வந்தியிருப்பேன்...
நீயாகிப் போனதால்
ஏக்கத்தோடு
திரும்பியிருக்கிறேன்...
- இரேவதி பால்ராஜ், நா. ம. ச. ச. வெ. நா. கல்லூரி, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.