உலகப்போரில் உன்னதக்காட்சி
இரண்டாம்போர் உலகத்தில் மூண்ட போதோ
இரக்கமற்ற செர்மனியின் நாசியர்கள்
கரம்பிணைத்தே உருசியாவின் வீரர் தம்மை!
கடுஞ்சிறையில் கைதிகளாய் அடைத்து வைத்தே
உரமழிக்க வீரர்கட்குணவும் நீரும்
உறையவைக்கும் குளிருக்கு போர்வை ஏதும்
தரமறுத்தே பட்டினியில் துடிதுடிக்கத்
தாங்கொண்ணா கொடுமை செய்து சாகடித்தார் !
நாள்தோறும் நூற்றுக்கும் மேலாய் வீரர்
நலிந்து சிறைஉள்ளேயே மாண்டு போக
நாள் கடந்தும் வயதான முதியவீரன்
நலிவின்றி எலும்பு தோலாய் ஆனபோதும்
தாள் பதித்து நடக்கின்ற வலிமையோடு
தாங்கி துயர் உயிரோடே இருக்கக்கண்டு
நீள்சிறையைப் பாதுகாக்கும் நாசியர்கள்
நீண்டதொரு ஐயத்தில் குழம்பி நின்றார்!
சிறையடைத்த வீரரினைக் காண்பதற்கும்
சிறைக்குள்ளே யாரையுமே விட்டிடாமல்
வரையறுத்த கடுமையான கட்டுப்பாட்டில்
வாய்த்தரத்த உறவை மட்டும் துரும்பைக் கூட
சிறைக்குள்ளே எடுத்து செல்ல இயலாவாறு
சிறப்பாகச் சோதித்தே அனுமதித்தும்
குறையாத நலமுடனே முதியவீரன்
குந்திருக்க நாசியர்கள் வியந்துநின்றார் !
அற்புதந்தான் சிறைக்குள்ளே நிகழ்ந்ததென்ன
அடைத்து வைத்த முதியவீரன் தம்மைக் காணப்
பொற்புதல்வி நாள்தோறும் வந்த போது
பொறுப்புடனேதான் பெற்ற குழந்தைக் கூட்டும்
நற்பாலைத் தந்தை வாய்ஊட்டி விட்டே
நலம்காத்து நாடுதனைக் காப்பதற்கே
உற்றதுணையாய் நின்ற தியாகத்தால்தான்
உயர்நாட்டைத் தாய்நாடாய்ப் போற்றுகின்றோம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.