மாமனிதர் சிங்காரவேலர்
மாமனிதர் சிங்கார வேலர் மக்கள்
மனமறிந்து படுந்துயரைத் தீர்த்த வள்ளல்
தாமறிய மீனவரின் நலனைக் காக்க
சட்டத்தைப் பயின்றவரும் தொழிலா ளர்கள்
சேமமுறப் பாடுபடும் சமுதா யத்தில்
சிந்தனையின் சிற்பியென உழைத்தும் காந்தி
நாமமதை மந்திரமாய்க் கொண்டு நாளும்
நாட்டுக்காய்ப் போராடி நின்ற வீரர்
மீனவராய் அவமானப் படுத்த பட்டு
மேற்கொண்ட வழக்கினிலே வெற்றிச்சூடி
தானணிந்தக் கருப்பங்கிக் களைந்து வாழ்வில்
சந்ததமும் நீதிமன்றம் செலம றுத்து
மீனவர்க்காய் மக்களுக்காய் தொழிலா ளர்க்காய்
மென்மேலும் பாடுபட உறுதி பூண்டார்
ஆனமட்டும் வாணாளில் போராட் டங்கள்
அயர்வின்றிச் செய்துமனம் கொள்ளை கொண்டார்.
அறிவியலைக் கைக்கருவி யாகக் கொண்டு
அதுகாட்டும் பாதையொன்றில் கேள்வி கேட்டு
செறிவான பதிலகாணும் அறிவை மக்கள்
சிந்தையிலே புகுத்திமற்ற அஞ்ஞா னத்தின்
உறியடித்து விஞ்ஞானப் போக்கில் தோன்றும்
உயர்மெய்ஞ்ஞா னத்தினாலே மேன்மை செய்யும்
அறிவுலக வாசலதைத் திறந்தார் மக்கள்
அகம்மகிழ முன்னோடி யாய்நின் றாரே!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.