பிறமொழியைக் கலக்காதே தம்பி!

பிறமொழியைக் கலக்காதே தம்பி தம்பி
பிழைபட்டுத் தமிழ்தவிக்கும் வெம்பி வெம்பி
அமுதென்ற பெயர்கொண்ட தமிழில நஞ்சாய்
அயல்மொழியின் சொற்களினைக் கலக்க லாமா
குமுதமுடன் பிறபூக்கள் கலந்து கட்ட
கொண்டபெயர் கதம்பமெனத் தானே சொல்வர்
தமிழிங்குக் கதம்பமெனத் திகழ லாமா
தமிழ்மொழியில் சொற்களுக்கா பஞ்சம், நெஞ்சம்
குமுறதடா பிறமொழியைக் கலக்கக் கண்டால்
கொள்ளையின்பங் கொண்டதமிழ் தவிக்க லாமோ!
பிறமொழியைக் கலக்காதே தம்பி தம்பி
பிழைபட்டுத் தமிழ்தவிக்கும் வெம்பி வெம்பி
மூவினமும் பின்தொடர உயிராய் மெய்யாய்
மூத்தமொழிச் சொற்களெலாம் அணிவ குக்கும்
பாவினமும் பல்வகையாய் எதிரி ருக்கும்
பழகுதமிழ் அழகுமொழிப் பேரெ டுக்கும்
நாவினிக்க நல்லதமிழ் பேசக் கண்டால்
நற்செவிக்குள் தேன்பெய்யும் சுகமி ருக்கும்
ஆவின்பால் அதில்சுண்ணம் சேர்க்க லாமா
அடடாவோ அப்பிழையைச் செய்ய லாமா!
பிறமொழியைக் கலக்காதே தம்பி தம்பி
பிழைபட்டுத் தமிழ்தவிக்கும் தம்பி தம்பி
நற்றமிழில் பிறமொழியின் சொற்கள் சேர்த்து
நவில்வதனால் தமிழுக்கே இழுக்கு, பார்க்கும்
நற்றமிழர் இதைப்பொறுத்தால் நாளும் நாளும்
நலிவடையும் நம்மொழிதான் தேயு மன்றோ
உற்றதொரு மனவுறுதி கொள்வாய் தம்பி
உரைதமிழிற் பிறமொழிகள் கலக்கக் கண்டால்
பற்றிக்கொள் நெருப்பெனவே சீறு தம்பி
பகைமுடிப்பாய் மொழிகாப்பாய் வாவா தம்பி!
பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி!
பிழைபட்டுத் தமிழ்தவிக்கும் வெம்பி வெம்பி!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.