இரண்டு, நான்கு என்று...!
ஒரு ஆப்பிளை வெட்டுவதற்கு
சிறிய கத்தி போதுமானதாக இருக்கிறது.
வாங்கி வந்த ஆப்பிள்களில் தேர்வு செய்வதும்
மிகக் கடினமானதாக இருக்கிறது.
அதில் ஏதேனும் ஒன்றை
ஆதாமும் ஏவாளும் கடித்துச் சுவைத்த பழமாக இருந்தால்
அது இன்னும் சுவையாகத்தானிருக்கும்.
நாங்கள் மொத்தம் நான்கு பேர்களாக இருக்கிறோம்.
ஒரு வெட்டில் நாலு துண்டுகளை
ஒரு கத்தியில் போட முடியாதாகையால்
மற்றொரு கத்தி வரட்டுமெனக் காத்திருக்கவும் முடியாது.
பசி கிள்ளுகிறது.
பசிக்கிறவன் முதலில் சாப்பிடட்டும்.
பிறகு துண்டுகளைக் கணக்கு செய்து கொள்வோம்.
நாலாயிருந்தால் என்ன? எட்டாயிருந்தால் என்ன?
ஒரு ஆப்பிள் கொஞ்சம் பசியைத் தீர்க்கட்டும் என
தேவபிரான் வேதவாக்கு அருளியதை யாங்கள் மாத்திரமே கேட்டோம்.
இப்போது ஒரு வெட்டில்
இரண்டு துண்டங்களாக ஆப்பிள்.
இரண்டும் மற்றொரு வெட்டில் இரண்டு துண்டங்களாக
மற்றொரு வெட்டு. சிறிது இடைவெளி விட்டு.
அதுவரை மற்ற இருவர் காத்திருக்கட்டும்.
ஆமென்...!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.