சித்திரம் பேசுதடி
காலத்தை வென்று நிற்கும் மல்லப்பாடி
கற்பாறை குகையொளிரும் சித்திரங்கள்
ஞாலத்தின் மூத்தகுடி தமிழர் என்னும்
ஞாயத்தைப் பேசுகின்ற ஆவணங்கள்
கோலத்தைக் கண்டின்றும் வியந்து போகக்
கொலுவிருக்கும் பல்லவர்தம் மாமண்டூரும்
சீலமுடன் மாமல்லபுரத்திருக்கும்
சித்திரமும் தமிழ்க்கலையின் பெருமை பேசும் !
பனைமலையின் கோவில்தம் சுவரில் காணும்
பசும் வண்ணக் கந்தர்வர் சித்திரங்கள்
வனைந்திருக்கும் காஞ்சிக் கைலாசநாதர்
வாழ்கோயில் சோமாசின் சித்திரங்கள்
நினைவிருந்தே அகலாமல் கண்ணுக்குள்ளே
நிற்கு தஞ்சை பெருங்கோயில் சித்திரங்கள்
புனைந்திருக்கும் மதுரை மீனாட்சி கோயில்
புகழோவியங்கள் நம் கலையைப் பேசும் !
சித்தன்னவாசல் தம் சித்திரங்கள்
சித்தத்தை மயக்குகின்ற அற்புதங்கள்
வித்தையினைக் குளமாக்கி எருமையானை
விளையாட அன்னங்கள் பறந்து செல்லச்
சத்தத்தைக் கேளாமல் துறவி மூவர்
சாய்ந்து மலர் பறிக்கின்ற காட்சியெல்லாம்
இத்தரையில் தமிழர்தம் கலை மேன்மையை
இயம்புகின்ற பல வண்ண சொற்களன்றோ !
(மல்லப்பாடி- தொன்மையான பாறை ஓவியங்கள் உள்ள இடம். விழுப்புரத்தின் அருகில் உள்ள ஊர் பனைமலை)
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.