உலகைத் தேடிய காதல் வேட்கை!

நதிக்கரையில்
நடந்த கால்கள்
ஈர நனைப்பில்
ஓடி ஆடியது
கடலில்
மூழ்கி மூழ்கி
காதல் அலைகள்
முத்துக்குளித்தது
கைகள்
மணலில்
அவள் பெயரை
எழுதித் திரித்தது
அலைகளோடு
அவளையும் சுமந்தபடி
கரையில் படுத்துறங்கினான்
காலச்சக்கரத்தில் அவளை
அமர வைத்து
காலால் மிதித்தோடினான்
மேகங்களை அவளின்
தேகத்தோடு
ஒப்பிட்டுப் பாடினான்
சூரியனை அவள்
கோபத்தோடு
ஒப்பிட்டுப் பாடினான்
நிலவோடு அவள்
முகம் வைத்துப் பாடினான்
காற்றோடு அவள்
குரல் வைத்துப் பாடினான்
கவிதையோடு அவளின்
பெயரை வைத்து
எழுதினான்
ஆழ்கடலில்
மூழ்கி எழுந்து அவள்
குரலில் மீண்டும்
முத்தெடுக்க மூழ்கினான்
திசைகளை தாண்டி
ஒரு திசை தேடி
அலைந்தோடினான்
உலகத்தை தாண்டி
மீண்டும் ஒரு
உலகைக் காண பறந்தான்
அவளின் கொலுசோசையை
அந்தத் தேசத்தின்
தேசியக் கீதமாக்க
முத்துக்களைச் சேகரித்தான்
செவ்வாய்க் கிரகத்தில்
முதல் இரவும்,
அண்ட சராசத்தில்
அறுபதாம் கல்யாணம்
முடிக்கவும் திட்டமிட்டான்
அவளின் திமிர் ஏறிய
நெஞ்சத்தை
நெத்தித் திலகமிட்டு
அவனுள்
தகனம் செய்தான்
பிரபஞ்சக் காதல் வேட்கையில்
அவளைக் கொண்டு
அகராதியை உருவாக்கினான்
அவள் மேல் அமர்ந்து திரிந்து
வசந்தக் காலத்தை
இதழ்களால் எழுதியே
உலகைக் கடக்கிறான்
உயிர் மூச்சை
வளிமண்டலமாக்கியவனாய்...
- கவிஞர் சாக்லா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.