அடடா நானோர் அதிசய மனிதன்!
என்னை யறிந்தவன் எனக்குள் ளிருந்தவன்
என்னை யுணர்ந்தவன் என்றும் தெரிந்தவன்
தன்னைப் புரிந்தவன் தடங்கள் பதித்தவன்
முன்னைப் பழவினை முற்றுந் துறந்தவன்
எண்ணத் தூமழை எழுத்தா யாக்குவன்
மண்ணை விளைக்கும் மாவிதை தேக்குவன்
புண்ணைக் கிளறும் புன்மை நீக்குவன
வண்ணங் குழைத்து வானவில் லாக்குவன்
கொஞ்சும் சொற்களைக் கோதி வளர்ப்போன்
எஞ்சும் பொழுதி லிருந்து நிலைப்போன்
மிஞ்சுங் கவிதையில் மேன்மை படைப்போன்
துஞ்சுங் கனவதன் துயிலெழ உடைப்போன்
அடடா நானோர் அதிசய மனிதன்
படவும் கெடவும் பட்டறி வுடையோன்
கடந்து போகும் காலம் நிறுப்போன்
விடமும் மருந்தாம் விந்தைசெய் வேனே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.