முதுமையின் மொழி
வெறுமையின் வெற்றிடத்தில்
நிரப்பப்பட்டுக் கொண்டே
இருக்கும் தனிமை…
சிறுவர்கள் புறக்கணிக்கும்
அறிவுரைகள்…
பெரியவர்கள் நிராகரிக்கும்
அனுபவம்…
இவற்றோடு திரும்பவும்
பூக்கும் தனிமை…
இளமை மனதில்
உடலின் பிணிகள்
உட்கார்ந்து ஆளும்
தனிமை…
மனதின் ஓட்டத்தைச்
சொல்ல முடியா
வாய் குழறும்
வெறுமை…
மூளையின் செயலை
முறித்து வெளியேற்ற
மறுக்கும் உடலின்
வெறுமை…
விரும்பும் உணவு
அருகிருக்க வெறுக்கும்
ஜீரண உறுப்பின்
வெறுமை…
சுவாசக் காற்று
ஆக்சிஜனையோ
கார்பன் டை ஆக்ஸைடையோச்
சுமக்காமல் பிணிகளால்
சூழப்படும்
நுரையீரலின் வெறுமை
என்று,
இளமைத் தொலைத்து
முதுமை ஏற்கும்
நொடிகளில் தொடங்குகிறது
வாழ்க்கையின் வெறுமையும்
தனிமையும்…
மனம் முழுவதும் தேடலும்
புத்துணர்வைக் கேட்கும்
தவிப்பும் மறுதலித்து
விக்கித்துப்போன
நினைவுகளிலேயே ததும்பி
மறைகிறது முதுமை…
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.