பாலைவனப் பிச்சைக்காரன்
பூமியின் ஆழத்தைக்
கணக்கிடத்
துளையிடும்
பேரோசை
அந்தச் சப்தம் மட்டுமே
காட்டில் ஒலித்த
அதிசய ஓசை
சங்கீத வித்துவான்கள்
(தொழிலாளர்கள்)
சங்கமித்து இசைக்க,
வெறிச்சோடிய
வீதிகள்
இசையில்
நடமாடத் தொடங்கியது
கற்களைப் பொறுக்கிக்
கலப்பையில்
போடக் காக்கைகளைக்
காணவில்லை
குச்சிகளை
எடுத்து
கூடுகள் கட்ட
குருவிகளைக்
காணவில்லை
மனித எச்சில்
எலும்புகளை
ருசித்திட
தெரு ஜீவன்களைக்
காணவில்லை
எல்லாவற்றையும்
விட்டு வந்த
மனிதக் கூட்டம்
மட்டும்
அலை மோதி
நுரை பொங்கியது
அந்தோ...
வெய்யிலின்
சுருக்கெழுத்தைச்
சுமந்த வண்ணம்
வியர்வை மழையில்
நனைந்த மனிதன்
நிழலுக்குத் தன்
சட்டையைக்
கோணியாகப்
போர்த்திக் கொண்டு
ஓடி வந்தான்
நீர் புகட்டும்
குழாயில்
தடுக்கி விழுந்து
வாய் நனைத்தப்பின்
கண் கூசிட
முழங்கினான்
தனிந்த தாகம் எப்போது
தவிக்குமென்று
தெரியவில்லை,
மறைந்த சூரியன்
உதிக்கும் வரையில்
பாலைவனப்
பிச்சைக்காரனுக்கு
மரணம் இல்லை என்று.
- கவிஞர் சாக்லா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.