மெல்லியக் கோடு
மெல்லிதாய் ஒரு கோடு
எப்பொழுதும் அந்தச்
சிறு இடைவெளிதான்
கலவரங்களாய் வெடிக்கின்றன
அந்தக்கோட்டைத் தாண்டி
இம்மியளவு முன்னேறினாலும்
கால்கள் துண்டாடப்படுகின்றன
உறவு முறிகிறது
தலையற்ற பிண்டமாகிறோம்
இடைவெளி குறையவும்
கூடவும் இல்லாததாய்
எப்பொழுது இருக்கும்?
ஏதுமற்ற இயங்குவெளியில்
நம்புலன்கள் ஏதும்
படராமல் இருக்கும்
வேளையில்…
எண்ணங்களுக்கும் வரையறை
போட்டு,
பூதக் கண்ணாடிகளால்
அந்தச்சிறு எல்லைக்கோடு
மீண்டும் மீண்டும்
அழுத்தம் திருத்தமாய்
தம்தடிமனை மேம்படுத்திக்
கொண்டேப் போகிறது
வன்முறைக் கரங்களில்…
குழந்தாய்! கவனமாயிரு!
எப்பொழுதும் நம்மைத்
துண்டாக்கலாம்
அந்த
மெல்லியக் கோடு…
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.