ஆலந்தூர் மோகனரங்கன் அடிதொடர்வோம்
மீனாம்பாள் கோபால்தம் அருமைச் செல்வன்
மீட்டுகின்ற வீணைதரும் இசையின் செல்வன்
தேனாக மெல்லிசையைக் காற்றில் சேர்த்துத்
தெவிட்டாத இன்பத்தைச் செவிக்க ளிப்போன்
மானாகத் துள்ளிவரும் பருவப் பெண்ணின்
மதிமுகமாய் ஈர்க்கின்ற கவிதைக் கோமான்
வானத்துக் கதிர்இருளை ஓட்டல் போல
வடிக்குமிவன் கவிமருளை ஓட்டும் நன்றாய் !
நூலகராய்த் தம்வாழ்வைத் துவக்கி நல்ல
நூலாக வாழ்பவர்தாம் மோகன ரங்கம்
காலத்தை வெல்கின்ற கவிதை நெய்து
கவின்வனப்பைத் தமிழுக்குச் சேர்க்கும் பாவோன்
கோலத்தில் எளிமையொடு அரவ ணைப்பில்
கோப்பெருமான் பிசிராந்தை நட்பின் பண்போன்
மூலத்தொல் காப்பியத்து நூற்பா போன்று
முத்தமிழைக் காப்பவர்தாம் ஆலந் தூரார் !
கவிதையொடு நாடகங்கள் புதினம் என்று
கருத்தான படைப்புகளை நாளும் படைப்போன்
நவிலுமாறு சிறுகதைகள் குறும்பா என்று
நாட்டோர்கள் புகழுமாறு படைத்த ளிபோன்
கவிதையிலே நாடகத்தைச் சிறுவர்க் காக
கனித்தமிழில் முதன்முதலில் வடித்த ளித்தோன்
புவிபோற்றும் காவியமாய்க் கனவுப் பூக்கள்
புனைந்துதமிழ் அன்னைக்கு அணியைச் சேர்த்தோன் !
தமிழுக்குப் பெருமையினை நாளும் சேர்த்த
தமிழறிஞர் மு.வ.வின் வாழ்க்கை தன்னை
அமிழ்தாக வரலாறாய் வடித்த ளித்தே
அரும்பரிசை அரசாலே பெற்ற மேலோன்
சிமிழ்போன்ற இமயமெங்கள் காலில் என்ற
சிறப்பான கவிதைநூலால் விருது பெற்று
தமிழன்னை தலையினிலே மகுடம் சூட்டி
தமிழர்தம் அகமெல்லாம் அமர்ந்த கவிஞன் !
தண்டபாணி அடிகளாரின் சந்தப் பாவை
தனிஆய்வாய் ஆறாண்டு நுணுகிச் செய்து
வண்ணமயச் சரபமாக முனைவர் நூலாய்
வாசிப்போர் வியந்திடவே வடித்த ளித்தோன்
எண்ணற்ற பாமேடை இவரின் பாட்டால்
எழில்கொஞ்ச வானொலியோ எடுத்தொ லிக்கக்
கண்முன்னே தொலைக்காட்சி காட்சி யாக்கக்
கடல்கடந்து கவிதையிலே நிற்கும் கவிஞன் !
குறுந்தொகையின் குழந்தையென்றே குறும்பா பாடிக்
குவித்திட்ட பல்துறையின் நூல்க ளாலே
நறுந்தமிழோ நன்றாக நிமிர்ந்து நின்று
நவில்கின்றாள் தனிப்பெருமை சேர்ந்த தென்றே
பெரும்பேறு நாம்பெற்றோம் ஆலந் தூரின்
பெருங்கவிஞர் மோகனரங்கை பெற்ற தாலே
வருங்காலம் இவரடியைத் தொடர்ந்து சென்றால்
வளமாகும் தமிழ்மொழியே வணங்கு வோமே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.