எதுவரையில் இருக்கிறது மரணம்?
மனித உடலைத்
தூக்கிச் செல்லும்
மனிதர்கள் இருக்கும் வரையிலா?
தூக்க முடியா
மனித உடலைக்
கொத்தித் தின்னும்
அகோரப் பறவைகள்
இருக்கும் வரையிலா?
கடலில்
தூக்கி வீசப்பட்ட
உடல்கள்,
உப்பி மிதக்கும் வரையிலா?
நெருப்பில் எரிக்கப்படும்
உடல்கள் கருகி,
காடு அழியும் வரையிலா?
உடலைப் புதைத்து வைக்கும்
பூமியின் ரேகை ,
அழியும் வரையிலா?
எதுவரையில்
இருக்கிறது மரணம்?
இதுவரையில்
மரணித்த மனிதர்கள்
நிம்மதியாக உறங்குகின்றனர்!
மரணிக்கப் போகும்
மனிதர்கள்
மரண பயத்தில் அலைகின்றனர்,
எதுவரையில்
இருக்கிறது மரணம்?
சுவை அறியா
மரண வலியைச்
சுவைத்தப் பின்னே மரணம்!
அந்தச் சுவைதனை
சுவைத்திடும் ஆன்மாவிற்கு
எதுவரையில்
இருக்கிறது மரணம்?
- கவிஞர் சாக்லா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.