கட்டை வண்டி
கட்டவண்டி! - மரக்
கட்டை வண்டி!
ரெட்டைமாடு கொண்டு
பூட்டும் வண்டி!
ஈரேழு பதினாலு மூட்டை
ஈரட்டியல் போடுவோண்டி!
காடுமேடு ஓடும்வண்டி
கரடுமுரடான வண்டி!
காளைமாடு போட்ட வண்டி
கழனிமேடு தாண்டும் வண்டி!
நோக்கா தூக்கி சுத்துனோம்னா
நேக்கா பத்து பேரை சாத்துவோம்டி!
மோதாமலே காப்பதற்கு முன்பு
மோதாமுனை வெச்ச வண்டி!
சாட்டைக்கம்பு பைதாவில் படபடத்தா
ஒட்டங்காளைங்க வெருண்டோடும்டி!
வைக்கோலை எரித்தெடுத்து
விளக்கெண்ணெய் சேர்த்தெடுத்து
கடையாணி உராயுந் துவாரத்திலே
குடைந்து மை போடுவோம்டி!
வாய்க்காங்கரை வேப்பங்குச்சி
வாய்க்குமளவில் ஒடிச்செடுத்து
நேக்கா செதுக்கி சீர்செய்து
நோக்கா குச்சி போடுவோண்டி!
எம்மூரில்பேர்கால நேரத்திலேஇது
ஆம்புலன்சும் ஆன வண்டி!
ஊர்கோலம் போகும்வண்டி!
போர்க்கோலமும் பூணும்வண்டி!
உரச்சாக்கு கோணிப்பைதச்சு
உரமடிக்க உதவும் வண்டி!
உழவுக்கு ஏர் கலப்பை உரமூட்டை
உழவனுக்காய் சுமக்கும் வண்டி!
கூண்டு கட்டி குடும்பத்தோடு
கூட்டமாகக் கோவிலுக்கு போகும்வண்டி!
மருதநில வாகனண்டி! - விலையோ
மாருதியைவிட கூடுதல்டி!
- சுத்தமல்லி உமாஹரிஹரன், மேலநீலிதநல்லூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.