உணர்வுக்கு மதிப்பளிப்போம்!
உள்ளத்தின் உணர்ச்சிகளை
எடுத்துரைக்க எழுத்துக்களில் தேடினேன்
எதுகை மோனைகளை...
எதுகையும் மோனையும்
ஏராளமாய்க் கிடைத்தும் வசப்படவில்லை
வார்த்தைகள் மட்டும்...
உணர்ச்சிகள் அங்கே
நர்த்தனம் ஆட கேள்விகளே
விடையாய்ப் போனது அதிகாரமாய்...
சற்றே இறங்கி
பணிவாய்க் கேட்டேன் வார்த்தைகளிடம்
நான் செய்த தவறு என்னவென்று...
சற்றுநேரம் மௌனம் காத்து
வார்த்தையதுவும்
வாய் திறந்து மொழிந்தது...
உன்னில் உள்ளதை விட்டு விட்டு
என்னில் வந்து தேடும் மூடனே
உணர்ச்சிகளை உதிரவிட்டு
உணர்வுகளைச் சேமித்துப்பார்
உனக்கு உள்ளிருந்தும்
உருவெடுப்பேன் வார்த்தைகளாயென...
உண்மைதான் இப்புவியில் மனிதர்
உணர்ச்சியை உருவகப்படுத்தி
உணர்வுகளை மறைக்கின்றனர்
வாழ்க்கையில் ஒரு முறையேனும்
உணர்வுக்கு மதிப்பளித்து
வாழ்க்கைத் தோட்டத்தை
உணர்ச்சிகளால் மலர வைப்போமே...!
- ஜீவா, கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.