பாட்டுக்கொரு புலவன்
எல்லாம் புதிதென எட்டுத்திக்கும் முரசடித்தவன்
எம் முண்டாசுக்கவி பாரதி
சொல்லாத பொருளில்லை அவனியிலே அவனல்லால்
பாடலில்லை இந் நூற்றாண்டிலே
மொழியறிவும் ஞானச்செருக்கும் ஒருங்குசேர மிரட்டியவன்
செந்தமிழால் பாடலெங்கும் ஒளியூட்டியவன்
நெருப்புக் கங்கினை உலக மெங்கும்
பிரளயமாய் பாடலில் பிரசவித்தவன்!
எம்பாரதி பெருமைபாட இப்பிறவி போதாது
ஏழேழு தலைமுறைக்கும் புகழ்மாறாது
இன் சொல்லால் இறைவனாம் கண்ணனையும்
ஈன்ற தாயென பேசினானே!
நல்லதொரு வீணையாய் தமிழர்கள் மணக்க
நாளும் வாழ்த்தி னானே!
சக்தியுள்ளும் சகத்தின் அறிவை சஞ்சலம்
இல்லாமல் நிறைவாய் பெய்தானே!
அவனல்லவோ அறிவுக்கும் திமிருக்கும் செருக்குக்கும்
நம்முன்னே காணும் ஆசான்!
எளிமையாய் சிட்டுக் குருவியோடும் செல்லம்மாவோடும்
சுருங்கி விடவில்லை அவன்
சுந்தர வானம் சுதந்திரத்தில் திளைக்க
வேரில் நீர் பாய்ச்சினவன்
புன்னகையால் அல்ல தடாலடியால் மக்கள்
மனதை வேட்கையுறச் செய்தோன்!
அவன் பாடலைக் கேட்கக் கேட்க
உணர்வு மேலீட்டில் - நாமே
பாரதியாய் உயிராய் ஒன்றிப் போவோம்
நாமும் பாரதியின் பரம்பரை
என்பதால் என்றும் கர்வம் கொள்வோம்
வாழ்கபாரதி! வாழ்க கனல்!
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.