பொறி ஒன்று நெருப்பாகிறது

பொறி ஒன்று நெருப்பாகிறது
நம்மை நாமே குறைத்து மதிப்பிடும்போது
தோல்வி துவங்கி விடுகிறது
சக்தி ஒன்றும் குறைந்தவளில்லை
சிவனுக்கு நிகரானவள் தான்
ஆண் அடக்கி ஆள
அவளொன்றும் இயந்திரம் இல்லை
இயந்திரங்கள் இயக்கும் வல்லமை
இல்லாதவளும் நிச்சயமாய் இல்லை
பெண்பிறப்பு பெருந்தவம் என
பொpயோர் சொன்னதும் பொய்யில்லை
எதனில் பெண் இல்லை?
ஏற்றங்கள் மிகும் நாட்டில்
பெண்ணுழைப்பு அல்லால் ஏதுமில்லை!
அடுப்படி தொடங்கி அரசியல் வரையிலும்
அணுவில் தொடங்கி பேரண்டம் வரையிலும்
பெண்ணோடுதான் வளர்ச்சி!
பெண்ணால் தான் வளர்ச்சி!
தன்னைத்தானேதேற்றிக் கொள்ள
மனித இனத்திற்கான இயற்கையின்
கொடைதான் பெண்!
பேரன்பால் உலகாளுவதும்,
பேருழைப்பில் நாடாள்வதும்,
கணிவால் வீடாள்வதும் அவள்தான்…
கீறல்களுக்கு கீச்சிடுபவர்களை விட
பிரசவவலி தாங்கும் பெண்
எதிலும் சளைத்தவள் இல்லை…
குடும்பம் தொடங்கி சமூகம் வரையிலும்
எத்தனை எத்தனை பரிகசிப்புகள்
எல்லா நிலையிலும் உன்னையே
குற்றவாளியாகச் சுட்டும் விரல்கள்
காமப்பார்வைகளை வீசி விட்டு
உடுத்தும் உடை குற்றமென
உன்னையே கூண்டில் ஏற்றும்
பேச்சுக்கள்…
எதிலும் துவண்டு விடாதே!
உனக்குள் இருக்கும் சக்திக்கு
உற்சவ விழா எடு!
உன்னை நீயே உயிர்ப்பி!
உன்னை நீ கொண்டாடு!
சிறுபொறி இன்றி பெருநெருப்பு
உண்டாவதில்லை…
உன்னுள் கனன்று எறியட்டும்
யுகயுகாந்திரங்களின் பெரு நெருப்பு!
பற்றி எறியட்டும் பரிகசிப்புகளின்
பெருவெளி!...
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.