நாயெனச் சாபமிடு!

எத்தனைக் கவிகளும் ஞானிகளும்
எழுதித் தீர்த்த பின்
எனக்கென்று எழுதுவதற்கு மிச்சமிருந்தது
அது என் அம்மா
சிறுவயதில் தொல்லைகள் சிலாகித்தாளோ
சகித் தாளோ தெரியவில்லை
அடைமழைப் பொழுதுகளில் கம்பளிகளால்
அணைத்து தூங்க வைத்து
வெற்றுடலோடு குளிரில் நடுங்கும்
நிலையில் நோன்பி ருந்தாள்.
துடுக்குத்தனமாக திண்பண்டங்களை உண்டால்
இல்லாமையிலும் இன்சுவை மறந்திருந்தாள்
வளர்பருவம் நான் எட்ட
வளை புருவ மையிட்டு
தங்கத்தில் தோடு அணிவித்து
தன் அழகு குறைத்தாள்
எனக்கு அழுகை வர
என்னோடு அழுதி ருந்தாள்
காய்ச்சலென்றால் கைமருந்து பார்த்தாள்
அவளுக்கென்றால் தானாய் போகுமென்பாள்
நடக்கக் கற்று பேசக்கற்று
நாலிரண்டு வயதை எட்டியபின்பும்
அருகிருப்பவர்களின் கேலிகளைத் தவிர்த்து
நீயே என்னைக் குளிப்பித்தாய்
எவரேனும் கண் வைப்பாரென
கண்ணூறு கழித் திட்டாய்
படிப்பற்று இருந்தும் - நான்
படிப்பது என்னவென அறியாதபோதும்
என்மகள் சிறந்தவ ளென்று
ஏற்றிப் பேசி டுவாய்!
அவள்முன்பு யாரேனும் அழுதிட்டால்
வீட்டுப் பொருள்களை யெல்லாம்
வியப்பின்றி தந்திடும் தாய்
சிரித்துப் பேசினாலோ அவர்களைச்
சிலாகித்து நம்பிடு வாய்
பள்ளிமுடிந்து அருகில் வந்தால்
பொறுத்திரு பெண்ணே என
பொக்கிசங்கள் அவிழ்த் திடுவாய்
பொங்கித்தரும் உணவி லெல்லாம்
பாசங்கள் பொதித் திடுவாய்!
திருவிழா வந்தாலோ தலைவாரிப் பூச்சூடி
புத்தாடை புனைவித்து அணிகலன் பூட்டி
உன்னையல்ல என்னைத்தான் அழகு பார்த்தாய்
எனக்கா வென்று எதுவும் செய்தவள்
என் மெற்படிப்பிற் கென்று
தார மாக்கிய தாலியையும் சலனமின்றி
தானமாய் தந்திட் டாய்
ஒரு நாளும் எனக்கு சுமையேற்றாமல்
ஒவ்வொன் றையும் சுமந்தாய்
அறுந்து போன சேலைகளைத் தைத்து
அணிந்து கொண்டவள் - எனக்கு
கண்ணைப் பறிக்கும் விலை உயர்ந்த
கண்டாங்கி வாங்கி வைத்தாய்
அப்பா இறந்து பட்ட அல்லலிலும்
பணிக்கு அனுப்பி னாலில்லை
கரட்டுக் காட்டில் அடிமையாகக் களை
பறித் திட்டாள்
காய் கனிகள் சுமந்தாள் கைகள்
காய்த்துப்போக கல்லுடைத்தாள்
கட்டிட வேலைகளில் காய்ந்து
கருத்துப் போனாய்
கைகள் மென்மை தொலைத்து
கொப்புளங்கள் புடைத்திட்டதை
கல்லூரிப் பெண்ணென்று காயங்களைக்
காட்டாமல் மறைத்திட்டாய்
எழுதுகின்ற பேனாவுக்கும் பென்சிலுக்கும்
எழுதி அறியாத
அவள் விரல்கள் சோடை போனதை
அறிந்தாள் இல்லை
காலை ஒருகாட்டில் வேலை
மாலை ஒருகாட்டு வேலை
அவள் உழைத்துத் தேய
அருகில்லாத ஏக்கம் அலைக்கழிந்து
வருடங்கள்கூட நீ தேய்வதே
வளர்பிறை ஆகிப் போனது
என் நலனுக்கென்றோ தானே
ஏனோ உயிர் குறைத்தாய்
பாசத்தை மட்டும் பயிராய்
பெருக்கி ஊட்டு வித்தாய்
திருமணவயது நெருங்க நெருங்க
தினந்தினம் உறங்க மறந்தாய்
உண்ணுவதற்கும் கூட மறந்தாய்
உணிர் பெற்றிருக்கவும் மறந்தாய்
ஒவ்வொரு பொருளையம் பார்த்துப்பார்த்து
ஒருத்தியாய் தானே சேகரித்தாய்
வண்ணமுகம் வாடக் கூடாதென
அவள்தான் வாடினாள்
பெண்ணெய்பதால் என் தேவைகள்
பெரும்சுமையாகிப் போனதம்மா
கள்ளிப்பாலைப் பெண்ணுக்குத் தரும்
கொள்கை ஊர்தானம்மா நீயும்
இரத்தத்தை சுத்திகரித்து பாலாக்கி
இரத்தம் சொட்ட உயிர்கொடுத்தாய்
சிறுவயதில் மட்டுமா இன்றும்
தயங்காமல் பால் ஊட்டுகிறாய்
உனக்காகச் செய்ய நினைத்தது
உண்மையில் ஆயிரம் உண்டம்மா
உன் ஆட்காட்டி விரல்
காட்டிய திசையில் செல்கிறேன்
நானும் தாயாகி உன்
நாட்களைத் தொடரப் போகிறேன்
துன்பங்களில் அழுதஉன் விழிகளும்
உண்பித்து ஒட்டிய வயிறும்
வேலையால் நிறமிழந்த உடலும்
வேதனையால் வலுவிழந்த தோள்களும்
சிறுவயதில் என்னைக் குளிப்பித்தபோது
உன்கைகளில் தட்டுப்பட்ட சொரசொரப்பும்
இப்பொழுதெல்லாம் கண்முன் தோன்றி
இமைக்கவிடாமல் இம்சிக்கிறது அம்மா
ஏன் செய்வேன் உனக்காக
ஏன்னது என்று ஏதுமில்லையே
உள்ளத்தில் ஆலயம் கட்டி
உன்னைக் குடிவைத்து விட்டேன்
நீதான் உன் கருவறையில்
நிதானமாகச் சுமந்து திரிந்தாய்
நெஞ்சக் கருவறையில் வீற்றிருக்கும்
உன்னைக் கேட்கிறேன் - எனக்காக
ஒருவரம் தந்திடுவாயா அம்மா
நெஞ்சக் கருவறை போதும்
நான் உன்னைக் கண்குளிர
நித்தத்நித்தம் கண்டு பூரிக்க
நீ கொடுத்த கருவறைப்
பாதுகாப்பைத் தர வேண்டும்
என் கருப்பையில் புகுந்திடு
எனக்காக நீ தந்தவற்றை
உனக்குச் சிறிதளவேனும் தந்து
மாய்ந்திடத் துணிந்து விட்டேன்
தியாக உருவத்தைத் தாங்கி
தாயாகி வாழ்ந்திட வரம்தந்திடு
வார்த்தைகள் வாடிப் போனாலும்
உன்முகம் வாடக் கூடாதம்மா
எனக்காக என்னோடும் என்
கருவறையோடும் என்வாசம் தேங்கட்டும்
பிறக்கின்ற பிறப்பில் எல்லாம்
நானே உனக்குத் தாயாகவேண்டும்
அந்த வரத்தையும் நீயேதான்
எனக்குத் தந்தருள வேண்டும்
தாயின் திருவடி சொர்க்கம்
என்று உரைத்தான் ஞானி
நான் ஞானியல்லவே தேன்
சுமக்க ஆசைப்படும் ஓர் தேனீ
இப்பிறவியைக் கடந்து வாழ
உன்னிடம் கேட்கிறேன் தோணி
துடுப்பு நீயான போதும்
உன்னைச் சுமத்தலே விருப்பம்
வாழ்த்திடுவாய் தாயே நீ
வாழ்த்துவதில் வாழ்வேன் பலகாலம்
ஒன்று நீ என்
பிள்ளையாய்ப் பிறந்து விடு
இல்லையேல் உனக்கு காவல்
நாயாய் பிறக்கும்படி சாபமிடு
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.