தமிழ் என் காதலி
அடிமுடி அறியா அழகுப் பெண்ணவள்
அமுத மொழியால் நெஞ்சம் பறித்திட்டாள்
ஆகாச விழிகளிலே அன்பு பொங்க
ஆவி பறித்திட்ட நல் எழிலாள்
இன்பம் பொங்கிடும் இதிகாசப் புன்னகை
இயற்கைத் தாயின் இணையில்லாப் பேரழகி
ஈனும் பொழுதினிற் பேருவகை கொண்டாலோ
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்உன் தாய்
உயிரே உன்னைப் பார்த்து ஆவி
உருகுதடி உன்னைச் சேர்ந்திடிலோ சாவேனடி
ஊணே உருகி வழிந்தோடுதடி உண்மையில்
ஊரைக் கூட்டுவேனடி மணமுடிக்க
என்னால் ஆவ தொன்றில்லை அழகே!
எனைக்கட்டி இழுத்த துந்தன் சேல்விழியே
ஏனிந்த மௌனம் சொல்லி விடடி
ஏது சொல்வாயென காத்திருக் கிறேன்
ஐயம் கொண்டேன் அழகிய தீயே!
ஐயனின் அணங்கு நீ தானே!
ஓப்பனை ஊரா ஒளி ஓவியமே!
ஒன்று சொல்லடி உயிருடன் இருப்பேன்
ஓதியசங்க இலக்கியங்களில் அகமே அழகடி!
ஓயாமல் கற்போம் ஒத்துக் கொள்ளடி!
ஓளவையின் அதிமதுர நெல்லியடி நீயெனக்கு
ஔவையே சாட்சி யென் காதலுக்கு
அஃதே வாழ்வென உரைத்திடடி இல்லையேல்
இஃதே முடிந்திடும் என் இம்மை…
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.