பற்றுடனே பாதுகாப்போம்
ஏரிட்டு நீரிட்டு
ஏற்றவிதை பயிரிட்டுச்
சோறிட்ட உழவனவன்
சோகத்தில் துடிக்கின்றான் !
உயிருக்குத் துணையாக
ஊருக்கே உணவளிப்போன்
வயிறெரியும் பசி நெருப்பில்
வாடியுடல் சாம்புகின்றான் !
நாற்றுகளை நட்டுலகை
நல்வளத்தில் உயர்த்துபவன்
ஊற்றில்லா கிணற்றைப் போல்
உணவின்றி வாடுகின்றான் !
உரமிட்டுக் களையெடுத்தே
உடல்வளைய உழைப்பவனோ
கரமிரண்டில் காய்ப்போடு
கண்ணீரில் கலங்குகின்றான் !
விண்பொழிந்த நீர்த்துளியை
விளைச்சலிலே அமுதாக்க
மண்ணுழுத உழவனவன்
மனமழுதே ஏங்குகின்றான் !
நாட்டினுடை கடன் தீர்க்க
நால்போகம் விளைவித்தோன்
கூட்டுறவு கடனாலே
தூக்கினிலே தொங்குகின்றான் !
நெல்நட்டான் விலையில்லை
நிறையுழைப்பை மதிக்கவில்லை
கல்நட்டான் குவிந்தார்கள்
கழனி வயல் காணவில்லை !
பொன்விளையும் பூமியென்று
பொத்திபொத்திக் காத்தவனோ
பன்னாட்டு வணிகத்தால்
பட்டமரம் போலானான் !
உழவுதனைப் போற்றிடுவோம்
உழவுதனைப் போற்றிடுவோம்
முழக்கங்கள் நாடெல்லாம்
முழக்கயிறோ அவன் கையில் !
வெற்றுச்சொல் வாழ்வளிக்கா
வெறும் வயிற்றை நிரப்பாது
பற்றுடனே உழவரினைப்
பாதுகாத்தால் நாம் வாழ்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.