புத்தாண்டே வருக!
நல்லுறவுக் கரம்நீட்டும் புத்தாண்டே வருக
நற்சிந்தை யுணர்வூட்டும் நல்லாண்டே வருக
தொல்தமிழின் சிறப்பியம்பும் தொன்மையினைத் தருக
தோன்றுகின்ற நலம்யாவும் பொதுவாக்கித் தருக
பல்லாண்டின் வளம்யாவும் படைதிரட்டி வருக
பகைமுடிக்கும் எழுச்சியுடன் துணிவுடனே வருக
நல்லோர்கள் உறவுடனே நன்மையளளித் தருக
நாடுநல்ல நாடென்னும் நம்நாடாய் அருள்க.
மணலோடும் நதியோடு நீரோட வேண்டும்
மண்மீது விவசாயம் சீராட வேண்டும்
உணர்வோடு மொழிக்காகப் போராட வேண்டும்
உயர்கல்வி எளியோர்க்கும் எளிதாக வேண்டும்
வணங்கவருந் தெய்வங்கள் மனிதரென வேண்டும்
மானுடந்த ழைப்பதற்கு வழிகாட்ட வேண்டும்
இணக்கமோடி யற்கையினைப் போற்றிடவே வேண்டும்
எண்ணங்கள் புத்தாண்டில் எல்லோர்க்கும் வேண்டும்
வாழ்த்துவதில் வஞ்சனைகள் ஒருபோதும் வேண்டாம்
வாரிக்கொ டுப்பதிலே பின்வாங்க வேண்டாம்
தாழ்த்திப்பி றரைஎள்ளும் தன்மையதும் வேண்டாம்
தரங்கெட்டச் செயலாலே தடுமாற வேண்டாம்
வீழ்த்திப்பின் வரும்வெற்றி மமதைகொள வேண்டாம்
வேகத்தால் விவேகத்தை இழந்திடவும் வேண்டாம்
வாழ்வின்நல் மேன்மைகளைத் தொலைத்திடவே வேண்டாம்
வரும்புத்தாண் டினிலேநம் இலக்கடைவோம் நன்றே.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.