அறுவடைத் திருநாள்

நம் பாரம்பரியம் நாம் அறியும்
பொங்கல் திருநாள்…
சேலையும் வேட்டியும் பளபளக்க பகடிகளோடு
அன்னையர் புதுப்பானைப் பொங்கலிட்டு
புத்துணர்வு பெறும் பச்சரிசித் திருநாள்…
புதிதாய் தாவணி அணிந்த அரிவையர்
அழகு மிளிரும் அற்புதத் திருநாள்
காளையர் காளைகள் அடக்கும் வீரமும்
கொடையும் ஒருங்கே மெருகேறும் நாள்…
ஆண்டு முழுவதும் குடும்பச்சுமை
தாங்கிய எருதுகளின் ஏற்றமிகு நாள்
வெள்ளை பூசிய வீட்டின் தூசுகள்
தட்டப்பட்ட பழமையின் புன்னகைநாள்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும்
மண் சார்ந்த மக்களின் பெருநாள்
வானந்தொட்டு மண்வீழும் மழைத் துளிகளுக்கு,
பயிர்களின் பசுமையைக் காக்கும் கதிரவனுக்கு,
மண்ணைச் செழிப்பாக்கும் உழுகலப்பைகளுக்கு,
கலப்பைச் சுமந்து மண்ணை வளமைப்படுத்திய எருதுகளுக்கு,
என்றென்றும் நன்றியுரைக்கும் மனிதக்
கூட்டங்களின் நன்றிப் பெருக்கு நாள்…
இன்றுபோல் என்றும் கூட்டுணர்வு வெற்றிபெற
விவசாயி வாழ்வு செழிக்க,
எருதுகள் உழைப்பு மிளிர,
காளையரின் பெருமை கூட,
தொடரும் நாட்களில் பண்பாடு
காக்கும் இம்மண்ணின் மக்களுக்கு
தொன்னையில் தரப்படும் சுடு பொங்கலைப்
போல் கரும்பின் இனிமை தரும்
பண்பாட்டுப் பெருநாளின் வாழ்த்துக்களைப்
பகருவோம்! நம் பாரம்பரியம் நாம் அறிவோம்!
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.