அம்மா
அகிலத்தை ஆளும் ஒற்றைச்சொல் மந்திரம்
அன்பாலே அறிவைப் புகட்டுவதவளின் தந்திரம்
அன்றாடம் அடுக்களைக்குள் ஓயாதுழைக்கும் இயந்திரம்
அனலாய்க் கொதித்து எப்போதும் கேட்டதில்லை சுதந்திரம்
உதிரத்தை உதிர்த்து உயிர் தந்தவள்
உயிர் காக்கும் வித்தை அறிந்தவள்
உண்மை வழிகாட்டி பிள்ளைகளை வளர்ப்பவள்
உழைப்பால் தன் சமூகத்தை உயர்த்துபவள்
கரம் பற்றிக்கொண்ட மணாளனின் தாரமாய்
தரம் குறையாத மகவுகளை ஈன்ற தாயாய்
காரமில்லா வார்த்தைகளால் வழிகாட்டும் ஆசானாய்
வரம்தந்த அன்னையின் புகழ் பாடுவேன் சேயாய்
தலைவனை இழந்த பின்பு வரும் தடைதாங்கி
இலையிதிர்ந்த பட்ட மரமானலும் இடர்நீங்கி
கலைதனைக் கற்க நேர்ந்த மறுப்பறுக்க குரல்ஓங்கி
சிலையாய் வந்தமர்ந்துள்ளாய் என்மனதில் உயர்ந்தோங்கி
- விருதை சசி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.