எல்லோரும் தமிழ்ப்படிக்க...

எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டு மென்றால்
இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்.
செப்புமொழி பதினெட்டாய், சிந்தை ஒன்றாய்
செயலாகும் மொழிகளிலே நாட்டில் நன்றாய்
ஒப்பரிய தாய்மொழிதன் னோடி ரண்டாய்
உணர்வுடனே ஆங்கிலமும் பயிற்று வித்தால்
தப்பறியாக் கல்வியது தானாய்ச் சேரும்
தமிழ்மொழியும் பயிற்றுவிக்கும் பாட மாகும்
இப்போது வருந்தலைமு றைகள் எல்லாம்
இனிதாகத் தமிழைத்தான் கற்பா ரன்றோ
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டு மென்றால்
இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்
பிறமொழிகள் பயின்று,தமிழ் புறக்க ணிக்கும்
பிழையிங்கே தொடர்ச்சியாக நடக்கு தன்றோ
உறவெனவே தாய்மொழியைப் பயிலும் வாய்ப்பை
உருவாக்கி, பள்ளிகளில் பாடத் திட்டம்
திறமுடனே வகுத்திட்டால் தமிழ்த்தீம் பாலைத்
தெள்ளமுதாய் மாணாக்கர் பருகி நாளும்
மறக்காமல் தமிழைத்தான் வீடு தோறும்
வளர்த்திடுவார் உலகறியச் செய்வா ரன்றோ.
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டு மென்றால்
இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்
பழம்பெருமை பேசுவதில் காலம் போக்கும்
பகட்டதனைச் செய்யாமல் தமிழைப் பேணும்
நலம்பெருமை பேசிடுவோம் இலக்கி யங்கள்
நல்லதமிழ் செய்திடுவோம் ஆங்கி லத்தைப்
புலம்பெயர வைத்திடுவோம் பேசும் நாட்டில்
பொதுமொழியாய்ப் புகன்றிடுவோம் மாநி லத்தில்
வலம்செய்யும் தமிழ்மொழியை வளர்ப்போம் என்றும்
வழிவழியாய் மொழியாளும் வழமை யாலே.
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டு மென்றால்
இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.