சில சொந்தங்கள்

எப்படிச் செய்தாலும்
இப்படித்தான் ஆகுமென்று
ஏற்கனவே தெரிந்திருந்தும்
இடம் தராத மனதால்
உடன்பாட்டுடன் முழு வேலை செய்தேன்.
கடைசி நேரத்தில்
பந்திக்கு வருவபர்களால்
பக்கத்து வீட்டுக்காரன் நான்
ஓடியோடி வேலை செய்தாலும்
ஓரத்தில்தான் தானென்று
உணர்த்தினார்கள் அன்று.
சோற்றுக்கு வருவனுக்கு முன்னுரிமை தரும் நாம்
சொந்தத்திற்கு முன்னுரிமை தராதது ஏன்?
வேளைக்கு வருபவன் - வீட்டுக்காரனுக்கு
நெருங்கியவன் என்பதாலா - இல்லை
கலஸ் காட்ட வருவபனின்
கதைதான் சரியென்று
இடம் கொடுப்பதாலா...
அரைவாசி வயிற்றோடு மெசின் ஏறி
அத்தனை வேலையையும்
அலுக்காமல் செய்து
மழையில் நனைந்து - பட்ட
மரத்தை ஏற்றி
மதியச் சோறை
வயிறோடு சேர்ந்து
மறந்த மனதோடு
கதிரையும் மேசையும்
கடப்புக்கு கொண்டு வந்து - தண்ணி
டாங்கியும் வைத்து
சவுப்பாக இருக்கிறது
சரி கொஞ்சம் இருப்போம் என்றால்
கதிரையை இழுக்கமுதலே - முடிக்காத
காரியமொன்று முன்னுக்கு வந்து நிற்கும்.
பணியெல்லாம் முடிந்தென்று
பசித்த வயிறு - சாத்தியமாய் முந்தி
சோத்துப் பிளேட்டொன்டு
சுறுக்கெண்டு வரட்டுமெண்டு
கறி வைக்க முதலே
கத்திச் சொல்லிவிட்டு -முன்னுக்கு
கைகழுவித்து இருந்தால்,
எடுத்து வந்த ஏழு பிளேட்டையும்
என்னைத் தாண்டிபோனது - காலை
ஏழுமணி இருந்து வேலைசெய்த
எட்டுப் பேரில் ஒருவனுக்காவது கொடுத்திருக்கலாம்.
வாயால் கேட்டும் முதல் பந்தி உனக்கில்லை என்று
வாய்ப்பு தராத சொந்தங்களுக்கு என்ன சொல்வது
இடத்தை விட்டு நகரச் சொன்னது இதயம்
எழும்பித்து வந்தேன்.
பசியால் அல்ல - இந்தப்
பழக்கம் சரியில்லை என்று.
- சதாசிவம் டினேஸ்காந், படையாண்ட வெளி,கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.