தஞ்சம் அனைத்தும் தரணி ஆள்கவே!
துள்ளி நடக்கும் துளசி வாசமவன்
பள்ளிப் பருவம் வாராத பல்கலை
சொல்லித் தெரிய வேண்டுவதில்லை
சொர்க்கம் அவந்தான் சொல்கிறேன் புரியும்
தவழும் மாதமதில் தந்தையென அழைத்தவன்
கவலை எனக்கில்லை கருணைக் கடலவன்
முல்லைக்குத் தேர்கொடுத்த பாரி வாழ்ந்தமண்
எல்லை இல்லா வள்ளல் குணம்தான்
என்னை எனக்குக் காட்டும் கண்ணாடி
என்னை மறந்து இன்புறம் பெற்றிட
கண்ணால் பேசும் கவிதைக்காரன்
வள்ளுவன் வாக்கை வளம்பெறச் செய்தவன்
தள்ளி விலகாத தன்நிழல் போன்றவன்
இன்னல் இல்லாது இன்பம் அளிப்பவன்
மன்னன் அவனே மனமும் அவனே
பிள்ளை யொன்று பிறந்திட வேண்டி
கிள்ளை மனம்போல் கிஞ்சித்துக் கிடக்க
ஐப்பசி மாதம் அவனியில் வந்தாய்
அப்பன் ஆனேன் ஆனந்தம் கொண்டேன்
முப்பொழுதும் உன்னால் முகமலர வேண்டும்
எப்பொழுதும் உன்பதம் சேர்ந்திட வேண்டும்
தோற்பது துடிப்பது யாவும் உன்னால்
நோற்பது நுவல்வது யதுவும் உன்னால்
பார்ப்பது யாவும் பாரினில் உன்னால்
சேர்ப்பது செழிப்பது சேயுன் பின்னால்
நாற்பது ஆயிரம் நான்வரைந் தாலும்
தோற்கும் என்கவி தோகை முகந்தன்னில்
நோக்கும் திசையெலாம் நின்பதம் வேந்தன்
ஆக்கமும் ஊக்கமும் அனைத்தும் நீயே
நீக்கமற நெஞ்சில் நிற்பவன் வேந்து
கொண்டேன் உன்மீது குறைவிலா காதல்
கொஞ்சி மகிழ வேண்டுமே எளியோர்க்கு
நெஞ்சம் இரங்குதல் வேண்டும்
தஞ்சம் அனைத்தும் தரணி ஆள்கவே
- எம். சிவபாலன், கோயம்புத்தூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.