மீண்டுமொருமுறை...?

முக்காடொன்றில்
முகமிரண்டை முழுதும் புதைத்து,
திக்கு முக்காடி,
தேன் மழைச்சாரலில் நனைந்து,
அக்கம் பக்கம் இருப்போரை
துச்சமாய், நினைத்து
நடுங்கிய மேனியுடன்
நடைப் பழகிய நாட்களை
மறந்ததும் சரியோ கண்ணே?
மார்கழிப் பனியில்
மாலையும் மெல்லிய இரவும்
கட்டியணைக்கும் தருணம் வரை
பூந்தோட்டத்திலே பிரபஞ்சத்தை மறந்து
பித்தனைப் போல் நான் பிதற்ற
மொத்தத்தையும் செவியுற்று
குறுநகை நீ சிந்த -
ஆஹா, ஆஹா!
மீண்டும் வந்திடுமோ
மெல்லிசைப்போல் மனதை வருடிய அந்த நாட்கள்?
மெல்லியப் பூங்காற்றை சுமப்பதுப்போல்
ஒல்லியான தேகமுடையவளை
ஏற்றிக்கொண்டு இறுமாப்புடன்
நகர்ந்திடுமே அந்த சைக்கிள் என்னும்
இருசக்கர வாகனம்,
தேரொன்றில் அசைந்தாடி
பவனி வரும்
தேவதைப் போல் நீ
தோன்றிய அந்த கணங்கள்
உயிர்த்தெழுந்துத்தான்
வந்திடுமோ மீண்டும்?
கல்லூரி இறுதியாண்டின்
பிரிவுபச்சார விழாவினிலே
கைத்தவறிக் கொட்டிய
குளிர்பானக் கறையை
களைந்தெறிந்த
உன் கைக்குட்டை
என்ன தவம்
செய்திருந்ததோ?
மாலையில் நடந்த
மெழுகுவர்த்தி பார்ட்டியில்
அரையிருளில், பாதி ஒளியில்
அமர்ந்துண்டு மகிழ்ந்திட்ட
தருணத்திலும்
இறுதி விடைபெற்று
வெவ்வேறு ஊர்களுக்கு
பேரூந்தில் ஏறியமரும் வேளையிலும்
எதற்கோ ஏனோ
காதலை வெளிப்படுத்திட
இருவராலும் இயலவில்லை.
உருண்டோடிய காலத்தின் கோலத்தில்
நிறைவேறா நம் ஊமைக்காதல்
நெஞ்சமெனும் வெண்திரையில்
நிழல் படம்போல்
இன்னும்
ஓடிக்கொண்டுத்தான் உள்ளது.
அலைபேசிகள்
இல்லாக்காலத்தில் நம்மை
அலைக்கழித்தக் காதலது.
நிலையில்லா வாழ்க்கை கடலினிலே
சளைத்திடாமல்
நீந்த வைத்தக் காதலது.
இன்னுமுன்னை
தேடிக்கொண்டே இருக்கிறேன்
பசுமை நிறைந்த நினைவுகளை
போர்த்திக்கொண்டே வாழ்கிறேன்.
என்றாவதொருநாள் உலகின்
எதோவோரிடத்தில் சந்திப்போமென்ற
நினைவுகளுடன்.
சந்திப்போமா கண்ணே
மீண்டுமொரு முறை?
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.