விழுந்து தொழுவேன்
வந்துநிதம் போகின்ற வான்மதியே கொஞ்சம்நில்!
இந்தமண்ணி லேதிலியா யேங்கியேங்கி வாழ்பவன்நான்
சொந்தமண்ணை விட்டுவந்த சோகத்தைச் சொல்வேன்கேள்
பொழிகுண்டில் பலர்சாகும் போர்ச்சூழற் காலத்தில்
வழியின்றிப் புறப்பட்டேன் வழிந்தோடக் கண்ணீர்தான்
வான்வண்டி யேறுகையில் மனமெல்லாம் ஊர்நினைவில்
நான்வாடி நின்றிருந்தேன் நாளையென்ன நேருமென்று
பெற்றோரை யங்குவிட்டுப் பிரிகையிலே பட்டதுயர்
இற்றைவரை நெஞ்சுக்கு ளிருந்தென்னைக் கொல்லுதையோ
நான்நடந்த பாதையெல்லாம் நாளும்பி ணக்குவியல்
காண்பதாக வந்தசெய்தி கடிதத்தில் கண்டழுதேன்
நடந்தாராம் பசியோடு நம்மூரார் வீடின்றிக்
கிடந்தாராம் வீதிகளில் கீழ்நிலைதா னுற்றாராம்
தந்தையெனைக் காணாமல் தன்னுயிரைப் போக்குகையில்
வந்தவலி யாரறிவார் வார்த்தையின்றித் தவிக்கின்றேன்
எனினும்
மறக்க வியலா வாணாள் துயரில்
இறக்க நேரினும் இன்தமிழ் ஈழம்
எழுந்தொரு நாடா யிலங்கிடு மானால்
விழுந்து தொழுவேன் விரைந்து!
(பஃறாழிசைக் கலிப்பா)
- இணுவையூர் வ. க. பரமநாதன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.