பின்வரும் ஆதிக்கு...
நீரில் அமிழ்ந்தும்
சாம்பல் படிந்தும்
பூமியில் புதைந்தும்
காற்றில் தொலைந்ததுமாய்
காலம் தன்னுள்
வைத்திருக்கும் கதைகள்
ஏராளம்.
மலர் வனத்தை வேகமாய்
கடந்துவந்த காற்றிலும்
வீசும் நறுமண வாசம்.
யுகங்களாய் புகைந்தது
ஒருநாள் எரிந்து
சாம்பலாகும்.
வான் மழையேயானாலும்
தேவைக்கு அதிகமானால்
அது அழிவை
உண்டு பண்ணும்.
மௌனங்களால் பேசிய
காலம் போய்
இரைச்சலில் உழல்கிறது
உலகம்.
இப்பிரபஞ்சத்தின் கடைசி
உயிரின் கதையையும்
எப்போதும் போல்
தன்னுள் வைத்திருக்கிறது
காலம்.
அது பின்வரும் ஆதிக்கு
முதல் நிகழ்வு.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.