முதல் மழை
![](http://www.muthukamalam.com/images/2020/loversumbrella.jpg)
புத்தம் புது
முதல் மழையின்
ஸ்பரிசத்தால்
புவியடையும்
சொர்க்கம் போல்-
என்னிதழில் நீ பதித்த
இனிய முதல் முத்தம்
பறக்க வைத்ததே
பல பட்டாம் பூசிகளை
குறுகிய இதயக் கூட்டுக்குள்.
நீலக்கடல் கரையினிலே
நித்தம் நின் வரவுக்காய்
காத்துக் கிடக்கையிலே
கன்னியென் தனிமையறிந்து
காதலனில்லா நிலைப்புரிந்து
கட்டித் தழுவி கன்னத்தில்
முத்தம் பல
இட்டுச் செல்கிறதே
தென்றலது அன்பே!
இனிமைக் காணத்தான்
இயலுமோ இனியவனே!
ஏகாந்தத்தில் நானிங்கு
இளமையெல்லாம்
வீணாகிடுமோ?
மீட்டாத வீணை
நானென்றாகிடுமோ?
ஒவ்வொரு
காதலர் தினத்தன்றும்
ஏக்கத்துடன் ஏகாங்கியாய்
காத்துக் கிடப்பதும்
ஏமாற்றத்துடன்
என்னை நானே சமாதானம்
செய்துக் கொள்வதும்
வாடிக்கையாகி
விட்டதும் ஏனோ?
தேசத்தைக் காத்திடச்
சென்றவனே! என்
நேசத்தையறிந்து
வாராயோ விரைந்து.
பாரத - பாக்..எல்லையில்
எங்கோ ஒரு மூலையில்
பரஸ்பரம் நடந்தேறிய
துப்பாக்கிச் சூட்டின் போது
காணாமல் போனாயாம் நீ,
உன்னிருப்பிடம் தெரியாமல்
திணறுகிறதாம்
நம் இராணுவம்,
தெரியாதாம்
அவர்களுக்கும்
திடீரென நீ
மறைந்த காரணம்.
விரைந்து நீயும் வந்து
விரல்களால்
இவ்வீணையின்
தந்தியை மீட்டு;
உலகக்
காதலருக்கெல்லாம்
உண்மைக் காதலை
வெளிச்சம்
போட்டுக் காட்டு.
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.