குறுங்கவிதைகள்
தொடரியின் பெட்டிகளை
எண்ணி முடிப்பதற்குள்
கடந்து விட்டதே வானவில்.
*****
புதுப்பிக்கப்பட்ட படிகள்
தடையின்றி தரிசிக்கலாம் இனி
தாரகைகளை.
*****
வெளியேறுகிறாள்
பாசத்தையும் ஒப்படைத்து விட்டு
வாடகைத்தாய்.
*****
உதிர்ந்த இலைகளை கூட்டுகையில்
விளக்குமாற்றில் சிக்கியவாறே...
நகரும் நிழல்கள்.
*****
குழந்தையிடமிருந்து
தப்பிய நீர்க்குமிழியை
பதம் பார்க்கும் மழை.
*****
மூன்றாம் பிறை
ஒளி போதவில்லை
எங்கே நீ மின்மினியே?
*****
பச்சோந்தி ஏறியதும்
நிறம் மாறிடும்
மரப்பட்டை.
*****
விளக்கேற்றியதும்
தஞ்சமடைந்திடும் இருட்டு
அகல்விளக்கின் அடியில்.
*****
பாடலையும் யாசகத்தையும்
விட்ட இடத்திலிருந்து தொடருகிறான்
இன்றும் தொடரி கலைஞன்.
*****
வீட்டை நடக்கிறேன்
அந்தகாரத்தையும் சில பல்லிகளையும்
அறையில் விட்டு.
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.