என் கைவண்ணம்
தாஜ்மகாலைவிடப் பெரியது.
நான் தாஜ்மகாலைக் கண்டதில்லை - ஆனால்
உனக்காய் ஒன்றுகட்டிவிட்டேன்.
அவன் கல்லால் கட்டினான்
நான் கவிதையால் கட்டினேன்.
அவன் ஒவ்வவொரு உயிர்ப்பும் கல்லில் தெரிகிறது - என்
ஒவ்வவொருஉயிர்ப்பும் சொல்லில் தெரிகிறது.
அவன் கல்லால் மூச்சுவிடுகிறான்
நான் கவிதையில் மூச்சுவிடுகிறேன்.
அவன் காதல் உச்சம் தொட்டதால் உலகம் வியக்கிறது
என் காதல் ஊரில் என்பதால் உள்ளம் வியக்கிறது.
உன்னால்
மும்தாஜை உணர்கிறேன்.
மொக்காடு போட்டிருப்பாள்
முகாலயப் பெண் என்பதால்
அழகாய் இருந்திருப்பாள்
அரசன் காதலி என்பதால்
நீயும் அதேதான்
மொக்காடு மட்டுமில்லை...
எனக்கு ஒரு தோல்வி
சாஜகான்
காவியக் காதலை
கல்லறையில் பதித்து
கண்முன்னே கொண்டுவந்து
உலகறியச் செய்துள்ளான்.
நான்
கண் கொண்டகாதலை
பேனா கொண்டு பதித்தும்
என் பெண்ணை
உலகறியச் செய்யவில்லை என்பதில்.
இருந்தும்
எனக்குஒருவெற்றி
தாஜ்மகால்
அவன் எண்ணத்திலே நின்ற காதலியின்
காதல் வண்ணம் - அவ்வண்ணம்
நிச்சயம் அவன்
கைவண்ணம் அன்று.
என் தாஜ்மகால்
என் எண்ணத்தில் நிற்கும்
காதல் கன்னியின் கவி வண்ணம்
அவ்வண்ணம் - என்
கைவண்ணம்.
- சதாசிவம் டினேஸ்காந், படையாண்ட வெளி,கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, இலங்கை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.